நீதிக்கட்சியின் நிறுவனர்களில் ஒருவரான
பெருந்தலைவர்
M.C. ராஜா நினைவு தினம்
சென்னை சைதாப்பேட்டையை தாண்டுபவர்கள் எம்.சி.ராஜா மாணவர் விடுதியை பார்க்காமல் இருக்க முடியாது. ஒடுக்கப்பட்ட மக்களின் ஔிவிளக்காக அந்த மாணவர் விடுதியை நூறு ஆண்டுக்கு முன் தன் நண்பர் பழனியப்பனோடு சேர்ந்து தொடங்கியவர் எம்.சி.ராஜா.
சென்னை மகாண சட்டமன்றத்துக்கு முதன் முதலில் நியமிக்கப்பட்டவர் எம்.சி.ராஜா. இவர்தான் பட்டியலின மக்களின் சார்பில் அமைச்சரான முதலாமவர்.
டாக்டர் அம்பேத்கருக்கு முன்பே லண்டன் சென்று
பிரிட்டிஷ் அரசிடம் ஒடுக்கப்பட்ட மக்களின் பிரச்சினையை விளக்கியவர். மாண்டேகுவை சந்தித்தார். செம்ஸ்போர்டை பார்த்தார். வெலிங்டனுக்கு விளக்கினார். ரீடிங் பிரபுவுக்கு எடுத்துச் சொன்னார்.
கோஷன் பிரபுவுக்கு புரிய வைத்தார். இர்வின் பிரபுவுக்கு விளக்கம் அளித்தார்.
பிரிட்டிஷாருக்கு இந்திய சமூக அமைப்பை புரியவைத்தால்தான், அவர்களிடமிருந்து கிடைக்கும் குறைந்தபட்ச சீர்திருத்தங்களின் மூலம் பட்டியலின மக்களை அடித்தட்டிலிருந்து மேல்தட்டுக்கு இழுத்துக் கொண்டு வரமுடியும் என்று இறுதியாகவும் உறுதியாகவும் நம்பினார்.
"பட்டியலின மக்களின் மூலவர்" என அழைக்கப்படும் அயோத்திதாச பண்டிதர் இறந்து விட்டார்.
ரெட்டைமலை சீனிவாசன் தென்னாப்
பிரிக்காவில் இருந்தார்.
டாக்டர் அம்பேத்கரின் செயல்பாடுகள் இன்னும் கிளர்ந்தெழவில்லை. இத்தகைய சூழலில் இருபதாம் நூற்றாண்டின் தொடக்கத்தில் ஒரே நமபிக்கை நட்சத்திரம் பரையர் இன ஆளுமை எம்.சி.ராஜா மட்டும்தான்.
மயிலாப்பூர் சின்னத்தம்பி ராஜாபிள்ளை என்பதே எம்.சி.ராஜா.
மயிலாப்பூர் பூர்வீகமாக இருந்தாலும் செயிண்ட் தாமஸ் மலையில் செல்வச் செழிப்பான வணிக பரையர்கள் குடும்பத்தில் பிறந்தார்.
ராயப்பேட்டை வெஸ்லி கல்லூரிபள்ளியில் பள்ளிப்படிப்பும், சென்னை கிறித்துவக் கல்லூரியில் கல்லூரி படிப்பையும் படித்தவர். சைதாப்பேட்டை ஆசிரியர் பயிற்சிக் கல்லூரியில் ஆசிரியர் ஆனவர்.
இவரிடம் படித்தவர்தான் பின்னாளில் சென்னை மகாண சட்டசபையின் சபாநாயகரான பரையர்கள் இன ஆளுமை ஜே.சிவசண்முகம்பிள்ளை.
எம்.சி.ராஜா பிறவியிலேயே ஆசிரியர். பிரான்ஸ் நாட்டு போர்வீரனைப்போல எப்போதும் சுறுசுறுப்பாக இருப்பார் என்று எழுதியிருக்கிறார்.ஜே.சிவசண்முகம்
பிள்ளை
கல்வித்துறையின் மீது எம்.சி.ராஜாவுக்கு ஆசையையும் கனவையும் கண்ட பிரிட்டிஷ் அரசு. ஆரம்பக் கல்விக்குழுவில் அவரைச் சேர்த்தது. சென்னைப்
பல்கலைக்கழக செனட் உறுப்பினராக்கியது.
இளமையிலேயே டென்னிஸ் வீரரான எம்.சி.ராஜா சென்னையில் சாரணர் சங்கம் உருவாக்கியவர்.
அயோத்திதாசர்
மறைவுக்குப்பிறகு
சென்னை
ஆதி திராவிடர் மகாஜனசபையை சீரமைத்தார்.
கல்வி,போக்குவரத்து,வர்த்தகம் மற்றும் அரசியல் அதிகாரம் ஆகியவை காலத்தில் அழியாத சாதி துவேஷ்ங்களைக் குறைப்பதற்கு கிரியா ஊக்கியாக செயல்பட்டு வந்திருக்கின்றன. இதுபோன்ற பணிகளில் பூர்வகுடி மக்களை அதிகமாக பங்கெடுத்துக்
கொள்ள ஊக்குவிக்கப்படும்போது மட்டுமே சாதியின் பெயரால் அவர்களுக்கு ஏற்பட்ட இழிவை நீக்க முடியும் என்றார் எம்.சி.ராஜா.
மாண்டேகு - செம்ஸ்போர்டு குழுவை சந்தித்தபோது இந்த நாட்டின் அதிகார பீடத்தை ஆங்கிலேயர் கையிலிருந்து எங்களை ஒடுக்கி வைத்துள்ள உயர்சாதி இந்துக்களுக்கு மாற்றித்தரும் எந்த முயற்சிகளையும் எங்கள் உயிரைக்
கொடுத்தேனும் தடுப்போம் என்று கொந்தளித்தார்.
தீண்டத்தகாத நிலை இந்து
மதவாதத்துக்கு ஒரு கரும்புள்ளி என்பதை உணர்ந்து செயல்பட்ட ஒவ்வொருவரும் அந்தப்புள்ளியை நீக்கப் பாடுபடவேண்டும் என்றும் சொன்னார் அவர்.
அன்று சூத்திரர்களும் பட்டியல் மற்றும் பழங்குடியினரும் பிராமணர்களால் பொதுக்கிணற்றைப் பயன்படுத்தக்கூடாது. கோயில்களில் நுழையக்கூடாது. பள்ளி கல்லூரிகளில் சேரமுடியாது. கடிதங்களை அஞ்சல் நிலையத்தில் போட முடியாது. அஞ்சல் வந்தால் வீட்டில் கொடுக்காமல் தெருவில் போட்டுச் சென்றுவிடுவார்கள்.
சத்திரம், சாவடி நுழைய முடியாது. சுடுகாட்டில் புதைக்க முடியாது. முழு உடை அணிய முடியாது. செருப்புப் போடமுடியாது. தலைப்பாகை அணியக்கூடாது. நிலம் வாங்க முடியாது. மனைகைளைப் பதியமுடியாது. கேவலமான வசதியற்ற சுகாதாரமற்ற கிராமத்தில்கூட சேர்ந்து வாழமுடியாது.
தன்னைவிட வயது குறைந்தவன் பெயரைச்சொல்லி கூப்பிடுவான். தொட்டால் தீட்டு...பார்த்தால் தீட்டு...முன்னால் வந்தால் தீட்டு... மூச்சுக்காற்று பட்டால் தீட்டு என தீண்டாமை தலை விரித்து ஆடியது.
வறுமையையும் மூக்கையும் பொத்திக்கொண்டு ஆண்டையிடம் அடிமை பேசுவது தீண்டாமையின் தீராக்கொடுமையே. தண்ணீர் எடுக்கக்கூடாது என்று தடைபோட்டுவிட்டு குளிக்கவில்லை என்று கூறியது சேடிசத்தின் உச்சம். வீட்டுக்குள் திருட்டுத்தனமாய் குடிப்பவர்கள் வீடே இல்லாததால் தெருவில் குடிப்பவர்களை குடிகாரர்கள் என்று குற்றம் சாட்டியது குரூரம். வேட்டைச் சமூகத்தில் வேளாண்மை செய்தல் என்ற அறிவுக்கு பலநூறு ஆண்டுகள் முன்னதாகவே கிடைத்த விலங்குகள் உயிரினங்களை உண்டு வாழ்ந்தாேம் என்ற வரலாற்றுப் புரிதலே இல்லாமல் இறைச்சி சாப்பிடுபவர்களை இழிவாய் நடத்தியது கொடூரம். படிக்கவிடாமல் செய்துவிட்டுப் படிக்காதவன் என்று குற்றம் சாட்டினார்கள். இப்படிப்பட்ட கொடுமைகளை சொல்லிக்கொண்டே போகலாம். இதை எல்லாம் பார்த்து நொந்த பரையர்குல திலகம்
எம்.சி.ராஜா
ஒரு மனிதனின் ஆண்மையை அற்றுப் போகச் செய்துவிட்டார்கள் என்று குற்றம் சாட்டினார். பரிகாரம் காண துடித்தார்.
அவர் எழுதி
1927 ல் வெளியிட்ட ஒடுக்கப்பட்ட இந்துக்கள் என்ற ஆங்கிலப் புத்தகமே பிரிட்டிஷ் அரசுக்கு பல உண்மைகளைப் புரிய வைத்தது.
அன்றைய ஆதிக்கச்சமூகமான பிராமணர்களின் பல உண்மைகளைப் புரிய வைத்தது.
அரசியல் கட்சிகள் இப்பிரச்சினையை கையில் எடுக்க ராஜா காரணமாக இருந்தார்
. பிற கட்சித்தலைவர்களில் ஆரம்பத்தில் இந்தப்பிரச்சினையை கையில் எடுத்தவர்களாக முதலாவதாக டி.எம்.நாயரையும், இரண்டாவதாக காந்தியையும் எம்.சி.ராஜா குறிப்பிடுகிறார். டி.எம்.நாயர் மீதான நம்பிக்கையில் ஆரம்பகாலத்தில் அவருடன் நட்பு பாராட்டிய எம்.சி.ராஜா, நீதிக்கட்சி தொடங்கும்போது உடனிருந்தார். சில ஆண்டுகளிலே வெளியேறிவிட்டார்.
நீதிக்கட்சியில் இருந்து முரண்பட்டு இருந்த டாக்டர் சி.நடேசனார்,கே.வி.ரெட்டி நாயுடு ஆகியோருடன் இணைந்து செயல்படவும் செய்தார்.
1937 ஆம் ஆண்டு கே.வி.ரெட்டிநாயுடு அமைச்சரவையில் எம்.சி.ராஜா அமைச்சராக பொறுப்பேற்றார். ஆம்பூர் வடஆற்காடு ஜில்லா ஆதி திராவிடர் முதல் மாநாடு அதே ஆண்டு ஜீலையில் நடைபெற்றது. இந்த மாநாட்டில் அமைச்சர் எம்.சி.ராஜாவுடன் பெரியாரும் கலந்து கொண்டார். பெரியாரை மேடையில் வைத்துக்கொண்டு எம்.சி.ராஜா பேசும்போது, இப்போது இந்த மேடையில் தோழர். ஈ.வெ.ராமசாமிப் பெரியாரைக்கண்டு பெருமகிழ்ச்சியடைகிறேன். ஒரு் ஆதி திராவிட மந்திரி நியமிக்கப்பட வேண்டும் என சென்ற 6,7 வருடங்களாக கிளர்ச்சி செய்து வந்திருக்கிறார்.
அவர் தமது பத்திரிக்கைகள் மூலமாகவும், அதிகாரிகளிடமும், நேரில் சொல்வதன் மூலமும் அவர் நமக்காக பெருமுயற்சி செய்து வந்திருக்கிறார்.
ஆதி திராவிடர்களுக்குரிய இன்றைய மந்திரி ஸ்தாபனத்துக்கு பெரியாருடைய முயற்சியே காரணம் என்பது பொய்யல்ல. இந்த மாநாட்டைஅவர் நம்முடனிருந்து நடத்திக் கொடுக்க உதவியமைக்கு என் நன்றியையும் சந்தோசத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன் என்று சொல்லியிருக்கிறார்.
எம்.சி.ராஜா ஏன் அப்படிச் சொன்னார் என்றால் 1929 ல் சென்னை அரசாங்க நிர்வாக சபையில் சர் முகம்மது உஸ்மானின் காலம் முடிவடைந்தது. அப்போது அறிக்கை வெளியிட்ட பெரியார் இதுவரை இந்தப் பொறுப்பு எல்லா இனத்தவருக்கும் வந்து சேர்ந்து விட்டது. சீர்திருத்தத்தின் பலனை மற்ற வகுப்பார் அனுபவித்து விட்டார்கள். எனவே பூர்வகுடி இனத்தைச் சார்ந்தவருக்குத்தான் இதனைத் தர வேண்டும்
.நாமாகவே உயர்திரு ராவ்பகதூர் எம்.சி.ராஜா, எம்.எல்.ஏ அவர்கள் பெயரை ஞாபகம் மூட்டுகிறோம் என்று அறிக்கை வெளியிட்டார்.
இதனை மறக்காமல் எட்டு ஆண்டுகள் கழித்து ஆம்பூர் மேடையில் எம்.சி.ராஜா வெளிப்படுத்தினார். 70 ஆண்டுகள் கழித்து அவருடைய உரையை வெளியிட்டவர்கள் பெரியாரைப்பற்றி எம்.சி.ராஜா சொன்னதை மட்டும் இழி செய்கையாக இருட்டடிப்பு செய்து விட்டார்கள். பெரியாரின் பெருமையை சிதைப்பதாக நினைத்து எம்.சி.ராஜாவின் பெருந்தன்மையை மறைத்து விட்டார்கள்.
பூர்வகுடி மக்களான பரையர்கள்;
மற்றும் தாழ்த்தப்பட்ட மக்கள் அதிக அளவில் சட்டப்பேரவையில் இடம்பெறும் வழிமுறையை உருவாக்கினால்தான் அவர்கள் தங்கள் சமுதாயத்தை மேம்படுத்திக் கொள்ள முடியும் என்று சொன்னார் எம்.சி.ராஜா.
அன்று ஒரே ஓர் ஆள் இந்த சபையில் இருந்தபோது நடந்ததில் ஒரு சதவிகிதம் கூட இன்று 44 பேர் இருக்கும் சபையில் நடக்கவில்லை. ஐந்தில் ஒரு பங்கு பட்டியல் இன சட்டமன்ற உறுப்பினர்கள் இந்த சபைக்குள் இருக்கிறார்கள். இரட்டைக்குவளை முறையை தடுத்தார்களா? ஆளும் கட்சியின் எம்.எல். ஏ வையே தீண்டாமையாக நடத்துகிறார்கள், ஆளும் கட்சி எம்.எல்.ஏவும் மாவட்டச்
செயலாளரும். தடுப்பார் யாரும் இல்லை. ஆதி திராவிடர் நலத்துறையை ஆதி திராவிடர் நலத்துறை ஐ.ஏ.எஸ் தான் கவனிக்க வேண்டும்.
ஆதி திராவிடர் நலத்துறைக்கு ஆதி திராவிடர்தான் அமைச்சராக இருக்க வேண்டுமா என்ன?
பஞ்சமி நிலங்கள் என்னாச்சு? ஆதி திராவிடர் விடுதிகள் கேவலமான நிலையில் இருக்கக் காரணம்...தமிழ்நாடு சட்டன்றம் விடை காணத்தவறிய கேள்விகள் இவை.
இந்தியாவில் 130 ஆண்டுகள் ஆங்கிலேய ஆட்சி நடைபெற்ற பின்னரும் கூட பட்டியல் இனத்தவர்களாகிய நாங்கள் அதே நிலையில் இன்னமும் இருக்கிறோம். என்ற உண்மை துரதிருஷ்ட வசமானது என்று லண்டனில் 1929 ல் பேசும்போது எம்.சி.ராஜா சொன்னார். (சுதந்திர இந்தியாவில் 73 ஆண்டுகள் ஆனபின்பும் நிலைமையில் மாற்றம இல்லை). அரசாங்கம் எப்போதுமே சமூக அமைதியை நிலைநாட்டுவதில் கவனம் செலுத்துகிறதே தவிர சமுதாய சீர்திருத்த நடவடிக்கை மேற்கொள்வதில்லை என்றார் எம்.சி.ராஜா.
இப்படி நம் தமிழகத்தில் மிகச்சிறந்த ஆளுமையை, நாம் மறந்துபோன தலைவனை நினைவில் போற்ற வேண்டிய நாள்.
நாம் நம்மால் காலம்தோறும் கொண்டாடப்பட வேண்டிய தலைவனை நமக்காக பாடுபட்டு குரலை கைகளாக உயர்த்திப்பிடித்து கடைசி வரை உழைக்கும் வர்க்கத்திற்காகவும் நாதியற்றோரின் குரலுக்காகவும் வெடித்த தலைவனை நம் கண் முன் மலரச்செய்வதோடு மட்டுமல்லாது எம்.சி.ராஜா என்ற புனிதரை அடையாளம் செய்வோம்.
பெருந்தலைவர் எம்.சி.ராஜா நினைவு தினம் இன்று...!
No comments:
Post a Comment